Friday, May 1, 2015

எனக்கு நானே

நமக்கென்று ஒரு வலையில்
நாம் எண்ணியதெல்லாம் எழுதுவது ஒரு நிலை.

நாம் கண்டு ரசிக்கும்  வலைப்பதிவுகளுக்கு எல்லாம் சென்று
நித்தம் ஒரு பின்னோட்டம் எழுதுவதோ ஒரு கலை.

நாமே ஒரு கவிதை எழுதி அதை நாமே ரசித்து ரசித்து
சுகம் காணுவது ஒரு நிலை.

நமது நண்பர் பலர் எழுதும் கவிதைகளை ரசித்து ரசித்து
பாடி பாடி மகிழ்வதும் ஒரு நிலை.

பின் நோக்கிப் பார்க்கையிலே
சென்ற பதினான்கு வருடங்களாக
பத்தாயிரம் பின்னூட்டங்களுக்கு மேல் இட்டு இருக்கிறேன்

இது ஒரு சாதனை என்று சொல்லவில்லை.
வெட்டி வேலை எனவும் சொல்லவில்லை.

பின்னோட்டம் இடுவதால், ஒரு நன்மை இருக்கிறது.

எந்த ஒரு பொருளையும், நிகழ்வையும்,
பார்க்கும்போது, படிக்கும்போது,
எழுதுபவர் மட்டுமன்றி, அதனைப் படிப்பவர் பலரின்
கண்ணோட்டங்கள் தெரியவருகின்றன.
அவர்கள் பார்வையின் கோணங்கள் சில சமயங்களில்
அதிசயிக்கச் செய்கிறது என்றால் அது மிகையல்ல.



மற்றும், இக்காலத்து சிந்தனைகள் மத்தியிலே,
நான் எந்த வழியில் செல்கிறேன்
என்பது மட்டும் இன்றி, 
எனது சிந்தனைகள் ஒன்றுக்கொன்று பொருத்தமானவை தானா?
இல்லை அவற்றினுள்ளே முரண்பாடுகள்  இருக்கின்றனவா
என்று
அவ்வப்போது உணர்ந்துகொள்ள இந்த பின்னோட்டம் இடுவது உதவி செய்கிறது. ஆக அதனை
ஒரு கருவி எனவே நினைக்கிறேன்.

சென்றவிடாது செலவிடாது தீது ஓரி
நன்றின் பால் உய்ப்பது அறிவு

என்பார் வள்ளுவர்.

நாம் நல்ல இடங்களுக்குச் செல்லவேண்டும் .
அதை விட, நாம் செல்லும் இடங்கள் எல்லாமே
நல்லவை தானா எனத்தெரிந்து கொள்தல் வேண்டும்.

நல்ல என்பதற்கு உரிய பொருள் புரிந்து கொள்ளவேண்டும்.

எனக்கு நானே சொல்லும் அறிவுரை இது.

எந்த ஒரு மறை நூலையும் சரிவரப் புரிந்துகொள்ள ஒரு குருவின் வழியே கற்றுக்கொள்வதே சிறந்ததாம். 

குரு என்பவர் ஆசிரியர்.
நமது வாழ்க்கை எனும் பாதையிலே முதல் விளக்கை ஏற்றி வைப்பவர் அவரே.

குரு எனும் சொல்லில் இரு எழுத்துக்கள்.

கு என்னும் எழுத்துக்கு  இருட்டு என்றும்
ரு என்னும் எழுத்துக்கு அதை நீக்குபவர் என்றும் பொருள்.

தமிழ் மறையாம் வள்ளுவத்தை முழுமையாகப் படித்துணர
முதற்கண்
பரிமேலழகர், மணக்குடவர், காளிங்கர் போன்றோரின் உரைகள்
நல்ல வழிகாட்டியாக அமைந்து இருக்கின்றன.



மேலாக நாம் படிக்கையிலே ஒரு பொருள் . அந்த நூலை மற்றவர் விமர்சங்களின் வழியாக, அவர்களின் விரிஉரை வழியாக, அவர்களின் மொழி பெயர்ப்புகளின் வழியாக படிக்கையிலே ,

இந்த நூல்களின் உட்கருத்து, உட்பொருள் நாம் அறியாது சென்று விடும் அபாயம் இருக்கிறது.

பல நூல்களை நாம் படிக்கும் விதம் நுனிப்புல் மேய்வது போன்று தான் இருக்கிறது.

அகல உழுவதிலும் ஆழ உழு என்பது இவ்விடத்தே மிகப்பொருந்தும்.

இத்தனை படித்தேன் என்று பெருமைப்  படலாம் . தவறு அல்ல.
ஆயினும், எத்துணை அதிலிருக்கும் நுட்பொருள் உணர்ந்தேன்  என நாம்
நமக்குள்ளே ஒரு வினா எழுப்பி விடை பெறுதலும் நன்றே.

பிள்ளைப்பருவத்தில், பள்ளிகளில் படிக்கும் நேரத்தில் குறள் பல படித்திருக்கிறோம். இப்போது ஒரு அறுபது அறுபத்தி ஐந்து வருடங்களுக்குப்பின்னும் அதே குறட்பாக்களை படிக்கும்போது தோன்றும் பொருள் இன்னமும் ஆழ்ந்த தாக இருக்க வாய்ப்பு உள்ளது.

ஆங்கில இலக்கியத்தில், கல்லூரியில் சேக்ஸ்பியரின் கிங் லியர்,கீட்ஸ்,வோர்ட்ஸ்வொர்த் , எலியட் அவர்களின் ஆக்கங்களை நான் திரும்பவும் படிக்கையிலே நான் புரிந்திரா பொருள் இன்று கண்முன்னே நிற்பது வெள்ளிடை மலை.

இக்பால் கவிதைகள், ரஹீம் , துளசி, கபீர் தோஹாக்கள், தியாகப்பிரும்மத்தின் கீர்த்தனைகள், ஹரிவம்ச ராய் பச்சன் (அமிதாப் பச்சன் அவர்களின் தந்தை) கவிதைகள், தாகூரின் கவிதைகள் எல்லாமே இலக்கியச் சோலைகள்.

அதில் தொடர்ந்து நாம் நின்று தின்றோம் எனும்போது தான் அவற்றின் பொருள் முற்றும் புரிந்தோம், வென்றோம் என்ற நிலை.

நாம் அன்று சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என்று எனது வாதம் அல்ல.
நம்முடைய அனுபவப் பின்னணியிலே பழங்கால நூல்களுக்குப்
புதுப்புது அர்த்தங்கள் பரிணமிக்கின்றன என்று சொல்ல வருகிறேன்.

அண்மையில் நான் எழுதிய பின்னோட்டம் ஒன்றிலிருந்து.....

வானவில்மனிதன் வலைப்பதிவுக்கு நான் இட்ட பின்னோட்டம்.

//மோகன் ஜியின் கதையிலிருந்து வெகுதூரம் விலகி வந்தாச்சு!//
 நான் அப்படி நினைக்கவில்லை. அது ஒரு வெளித் தோற்றமே.
 எல்லா நடப்புகளுக்கும் ஒரு துவக்கம் என்றும் முடிவு என்றும் இருக்கும்.
 இருப்பினும் சிலவை சிந்தைக்கும் சிந்தனைக்கும் பொருட்களுக்கும் புலன்களுக்கும் அப்பாற்பட்டவையாக இருக்கின்றன.
அசிந்த்யா; கலு யே பாவா ந தாம்ச்தர்கெண யோஜயேத்
பிரக்ருதிர்ப்ய:பரம் யச்ச தத சித்தயஸ்ய லக்ஷணம்
 சிந்தனைக்கும் சிந்திக்கும் திறனுக்கும் அப்பாற்பட்ட விஷயங்கள் பல உள . அவற்றினை நாம் ஒருவருக்கு ஒருவர் செய்யும் தர்க்கத்தால் தீர்க்கலாகாது. ( அதனால் பலன் ஒன்றும் இலாது என்ற கருத்தினாலும் )
அவ்வாறான விஷயங்கள் வசிக்கும் இடங்களுக்கு,
ந தத்ர வாக்கச்சதி நோ மன:
(மனமோ வாக்கோ அங்கு செல்வதில்லை)
சரி, புலன்களுக்கு அப்பாற்பட்டத்தாக ஒரு பொருள் இருப்பின் அதை அடைவது எங்கனம்?
என்ற கேள்வி வரும்போது,
தத் விக்க்ஞானார்த்தம் ஸ குருமேவாபிகச்சேத்
அதை (அந்த பரம்பொருள் என்ன என்று தெரிந்து அதை) அடைய ஒருவன் குருவை அணுகவேண்டும்.
மனோவுக்கு
அந்த நுட்பமான பொருளை ஒரு உருவமாய் ஆராதிக்க இயலவில்லையே தவிர,
அந்த ஆத்யந்த சக்தியின் லீலையை உணர முடிந்திருக்கும்.
ஆகவே, மேற்கொண்டு தொடர,
குருவை அணுகவேண்டும்.
அன்னை  தானே முதல் ஆசான்.  
`

அவளை அழைத்துச் செல்கிறான்.
சுதா.











No comments:

Post a Comment