Wednesday, June 24, 2015

விடைகொடு .....

தமிழ் வலைப் பதிவுகளில் புரியாத ஒன்று :

ஒரு இடுகை  தமிழ் இலக்கணத்துக்கு உட்பட்ட உரைநடையா அல்லது வழக்கு அல்லது வட்டார /பேச்சு மொழியின் பிரதிபலிப்பா  என்று திடமாக சொல்லிட முடியாது என்பதே.

உரைநடை என்றால் எப்படி இருக்கவெண்டும் என்று ஆங்கில இலக்கியத்தில் பலர் கடந்த 2 அல்லது 3 நூற்றாண்டுகளில் பல்வேறு கட்டுரைகளில் சொல்லியிருக்கிறார்கள் என்றாலும் , அவர்கள் சொன்னதெல்லாம், தமிழ் இலக்கியத்திற்குப்பொருந்துமா என இருமொழி வல்லுநர் எவரேனும் தான் சொல்ல இயலும்.

எந்தப்பொருளையும் விளக்க, விரித்துச்சொல்ல, பயன் படுத்தப்படும் இலக்கண சுத்தியுடன் கூடிய வாக்கியங்களே உரை நடை எனப்படுவது ஆகும். எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்றும் மூன்றும் இருக்கவெண்டும். குறைந்தது எழுவாய் பயனிலை ஆவது இருத்தல் அவசியம் என்பர்.

அந்தக்காலத்தில் எனது தமிழ் ஆசிரியர் சொல்வார் :
(நீ) எழுவாய், செயல் படு (இல்லையேல்)  பொருள் இல்லை.என்று நினவு வைத்துக்கொள்ள ஒரு acronym ஆக சொல்வார்.

எந்தப்பொருளையும்பற்றியும் உரை நடை இலக்கியம் இருக்க இயலும். எந்தப் பொருளையும் என்று சொல்லிவிட்டதால், முதல் ஃ  வரை எது வேண்டுமானாலும், நிசமோ, கற்பனையோ, கதையாக, கட்டுரையாக, பெருங்கதையாக, வசன காவியமாக இருக்கலாம்.

இன்று படித்தது சீனு அவர்களின் கட்டுரை ஒரு அழகான உரை நடைக்கு ஒரு உதாரணம் .
அவரது வலை   திடங்கொண்டு போராடு

  தலைப்பு :


விடைகொடு என் ஏர்டெல் ஏகாதிபத்தியமே...

+Srinivasan Balakrishnan

அவர் எழுதியதெல்லாம் ஒரு கைப்பேசி பற்றியே.

 அவருக்கு ஏற்பட்ட சுகத்தை, சோகத்தை, எதிர்பார்ப்பை, அதிர்வுகளை, அச்சங்களை, அவர்தம் நண்பர்களின் சிபாரிசுகளை  அழகாகவே வர்ணித்து இருந்தார்.

ஒரு சிறிய கைக்குள் அடங்கிய ஒரு பொருளை இமயப் பிரச்னை போல வர்ணிக்கும் திறன் சீனுவுக்கே கை வந்த கலை .

படித்து முடித்தபின்  , அந்த இடுகையில் கண்ட விடை என்னும் ஒரு சொல் மட்டுமே திரும்பத் திரும்ப மனதில் வந்து கொண்டே இருந்தது.

விடை என்ற சொல்லுக்கு எட்டு வகை பொருள் உளது என நன்னூல் கூறும்.

சுட்டு மறைநேர் ஏவல் வினாதல்
உற்றது உரைத்தல் உறுவது கூறல்
இனமொழி எனும்எண் இறையுள் இறுதி
நிலவிய ஐந்தும் பொருண்மையின் நேர்ப

(நன்னூல் - 386)

 இது தவிர, தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருட்கள் உள்ளன. சங்க கால இலக்கியத்தில் காணப்படும் பல சொற்களின் பொருள் இன்று காணப்படுதல் அல்லது உணரப்படுதல் கடினம்.

உதாரணம் : இந்த விடை என்ற சொல்லுமே.




தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதி சூடி
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாள் பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!


 விடை என்ற சொல்லுக்கு காளை மாடு, அல்லது எருது என்றும் பொருள் கொள்ளலாம்.

ஒருவனைப் பார்த்து எருமை மாடு என்றால், வழக்கப்பொருள் என்னவெனின், நாம் என்ன செய்யச்சொன்னாலும் செய்யாது சோம்பேறியாக காலம் தாழ்த்துபவன் எனப் புரிந்து கொள்கிறோம்.

நிற்க. 

ஏர் டெல் காரர்களும் அவ்வாறு தான் . என்ன நாம் கரடியாகக் கத்தினாலும் அவர்கள் விதியே வேறு. நம் விதியை நொந்துகொண்டு நம்மை விட்டால் போதும் என்று ஓடுவதைத்  தவிர வேறு வழிஇருக்கிறதா எனத் தோன்றவில்லை.

சென்ற மாதங்களில் ஒரு போஸ்ட் பைட் சிம்மை நான் ப்ரி பைட் ஆக மாற்ற 
நான் பட்ட பாட்டினை இங்கு விவரித்தால் அது கம்ப ராமாயணத்தில் அசோக வனச் சீதை கதை போல் இருக்கும்.  அவர்கள் கேட்ட எல்லா தொகைகளையும் ஐ.டி. போடோ எல்லாவற்றையும் கொடுத்த பின்னும் அவர்களிடமிருந்து எனக்கு போஸ்ட் பைட் கட்டண அறிவிப்பு வந்து கொண்டே இருந்தது. நான் போடாத கால்களுக்கு கட்டணம். மாத வாடகை ரூபாய் 350 எப்படியும் செலுத்தவேண்டும் என்கிறார்கள்.  அவர்கள் சொல்லும் காரணம் அந்த ஆண்டவனுக்குத்தான் புரியும். ஆண்டவனே உச்ச நீதி மன்றத்துக்குச் சென்றாலும் இன்று அங்கு இருக்கும் கூட்டத்தில் பெருமாளுக்கு நீதி கிடைக்க பத்து வருடங்கள் ஆகும். 

 எனவே,விடை கிடைக்காது என்ற தோன்றியதால், எது கிடைக்கும் என்று பார்த்து அதற்குத் தகுந்தாற்போல் ஒரு பின்னூட்டம் இட்டேன்.

பின்னோட்டம் இடுகையில், இந்த "விடை " எனும் சொல்லை வைத்துக்கொண்டே ஒரு பத்து வரிகள் எழுதினேன்.

விடை கொடு ஏர் டெல் ஏகாதிபத்தியமே !!

டவர் இல்லாத காரணத்தால் ஏர் டெல் உங்களுக்கு பதில் அளிக்கவில்லை.

அதே சமயத்தில், நடுவில், ஏதோ ஒரு டவரின் மேல் உட்கார்ந்து இருக்கும் சிவபெருமான்,
உங்கள் குரல் கேட்டு ,
எனக்கு செல்லிட்டு சொன்னார்:
,

அது என்ன உங்க பிரண்டு கோரிக்கை சரி இல்லையே என்றார்.

அது என்ன அவர் கோரிக்கை உங்களால் தீர்கமுடியாதது என்று வினவினேன்.

நான் அமர்ந்திருக்கும் ஒரே வாகனம் விடை.
அதை கொடு என்றால் எப்படி ?


நியாயம் தான் என்றேன்.

அவரை ஒன்று செய்யச்சொல். என்றார்.

சரி என்றேன்.

அவர் ஆபீஸ் விட்டு வரும் வழியில் க்ரோம்பேட் இருக்கிறது.

ஆம். ஆண்டவா.

அதனருகே நங்க நல்லூர் என்றொரு புண்ணியதலம் இருக்கிறது.

ஆம். அங்கே யாருனாச்சும் ஏர் டெல் ஜி.எம். இருக்காங்களா?

குறுக்கே  பேசாதே. (எங்க அம்மா சொல்லியிருப்பது நினைவில் வந்தது. சிவனுக்கும் நந்திக்கும் குறுக்கே போகக் கூடாது என்று )


சரி .

அந்த தலத்தில் , ஆஞ்சனேயர் இருக்கிறார்.

ஆமா.அங்கே சென்றால் ??

வடையாவது கிடைக்கும்.

என்று சொல்லி மறைந்தார். அந்த தோடுடைய சிவபெருமான். 

விடையேறியவன்.
சுப்பு தாத்தா.
www.subbuthathacomments.blogspot.com


*******************************************************************************************

No comments:

Post a Comment